தாத்தாவின் திறன்பேசி
இனியாவின் தாத்தா கடந்த மாதம்தான் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து அவர்களுடன் தங்கத் தொடங்கினார். அவருக்குத் தமிழ் நன்றாகப் படிக்கத் தெரியும்; ஆனால், திறன்பேசியைப் பயன்படுத்தத் தெரியாது. அப்பாவும் அம்மாவும் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவார்கள். இனியா பள்ளியிலிருந்து திரும்பும் வரை தாத்தாவுக்குப் பேச்சுத்துணைக்கு யாரும் இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் வீட்டிலேயே தனியாக அமர்ந்திருந்தார்.
ஒருநாள் மாலை, இனியா பள்ளியிலிருந்து திரும்பியபோது, தாத்தா தம் புதிய திறன்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு குழப்பத்துடன் அமர்ந்திருந்தார். "இனியா, ஊரில் இருக்கும் உன் பாட்டியிடம் பேச வேண்டும். ஆனால், இதில் எதை அழுத்துவது என்றே தெரியவில்லை," என்று அவர் பெருமூச்சுவிட்டார். பாட்டி உடல்நலம் சரியில்லாததால் தாத்தாவுடன் சிங்கப்பூருக்கு வரவில்லை. அவரைப் பிரிந்து தாத்தா மிகவும் வாடியிருந்தார்.
இனியா தன் பள்ளிப் பையைக் கீழே வைத்துவிட்டுத் தாத்தாவின் அருகில் அமர்ந்தாள். காணொளி அழைப்பு செய்வது எப்படி என்று படிப்படியாகக் கற்றுக்கொடுத்தாள். தாத்தா கவனமாகக் கேட்டு, ஒவ்வொரு படியையும் பலமுறை செய்து பார்த்தார். சில நேரம் அவர் தவறான பொத்தானை அழுத்தினாலும், இனியா பொறுமையாக மீண்டும் விளக்கினாள். தாத்தா மறந்துவிடாமல் இருக்க, ஒவ்வொரு படியையும் ஒரு தாளில் பெரிய எழுத்துகளில் எழுதிச் சுவரில் ஒட்டினாள்.
முதல் முறையாகத் திரையில் பாட்டியின் முகத்தைக் கண்டதும் தாத்தாவின் கண்கள் கலங்கின. இருவரும் அரை மணி நேரம் மகிழ்ச்சியாகப் பேசினர். தாத்தா பாட்டியிடம் இனியாவைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். அழைப்பு முடிந்ததும், தாத்தா இனியாவின் தலையை அன்புடன் தடவினார். "நீ என் ஆசிரியர்!" என்று அவர் சிரித்தார்.
அடுத்த சில வாரங்களில், தாத்தா தாமாகவே அழைப்புகள் செய்யக் கற்றுக்கொண்டார். இப்போது அவர் தமிழ்ச் செய்திகளையும் பழைய பாடல்களையும் திறன்பேசியில் கேட்டு மகிழ்கிறார். இரவு உணவின்போது, அன்று கேட்ட செய்திகளைப் பற்றி அவர் குடும்பத்தினருடன் ஆர்வமாகப் பேசுகிறார். வெற்றுத்தளத்தில் சந்திக்கும் மற்ற முதியவர்களுக்கும் அவர் இப்போது திறன்பேசியைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கிறார்! தாத்தாவின் முகத்தில் இப்போது எப்போதும் புன்னகை தவழ்கிறது.